புதன், 3 அக்டோபர், 2012

ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் அப்துல் ஹக் அன்சாரி மரணம்


அலிகர் : பிரபல இஸ்லாமிய அறிஞரும், எழுத்தாளரும், ஜமாஅத்தே இஸ்லாமியின் அகில இந்திய தலைவராகவும் இருந்த டாக்டர் அப்துல் ஹக் அன்சாரி அவர்கள் மரணம் எய்தினார்கள். அன்னாருக்கு வயது 81. நேற்று மாலை 4 மணியளவில் அலிகரில் அவரது வீட்டில் வைத்து நெஞ்சு வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து மரணம் நடந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் டியோரியா மாவட்டத்தில் டாம்கோஹி என்னுமிடத்தில் 1931 செப்டம்பர் 1ல் டாக்டர் அன்சாரி பிறந்தார். ராம்பூரிலுள்ள தர்ஸக் இஸ்லாமி மதரஸாவில் 1953ல் ஆலிம் பட்டம் பெற்றார். 1957ல் பி.ஏ. (அரபி) பட்டமும், 1959ல் தத்துவவியலில் எம்.ஏ. (M.A. in Philosophy) பட்டமும் 1962ல் அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் தத்துவவியலில் பி.எச்.டி. (Ph.D in Philosophy) பட்டமும் பெற்றார். அதன் பிறகு 1972ல் அமெரிக்காவிலுள்ள ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் M.T.S in Comparative Religion and Theology பட்டம் பெற்றார்.
1965 முதல் 1978 வரை மேற்கு வங்கத்தில் இருக்கும் விஸ்வ பாரதி பல்கலைக் கழகத்தில் அரபி, பெர்சியன், இஸ்லாமியப் பாடங்களின் பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் (HOD) பணியாற்றினார். 1978 முதல் 1981 வரை சூடான் பல்கலைக் கழகத்தில் இஸ்லாமியப் பாடவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார். பின்னர் 1982 முதல் 1985 வரை தஹ்ரான் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். பின்னர் 1985 முதல் 1995 வரை ரியாதிலுள்ள இமாம் முஹம்மத் பின் சவூத் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். அவர் தம் இளம் வயதிலேயே ஜமாஅத்தே இஸ்லாமியில் உறுப்பினராக இணைந்தார். ஜமாஅத்தின் மத்திய பிரதிநிதிகள் குழுவுக்கும், மத்திய ஆலோசனைக் குழுவுக்கும் பல முறை அவர் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2003 முதல் 2007 வரை ஜமாஅத்தின் அகில இந்திய தலைவராக செயல்பட்டார். 2005 முதல் இஸ்லாமிக் அகாடமியின் இயக்குனராகவும் இருந்தார். அவர் பல நூல்களை ஆங்கிலத்திலும், உர்தூவிலும் எழுதியுள்ளார். இன்று காலை 9 மணியளவில் அன்னா ரது ஜனாஸா தொழுகை அலிகரில் நடைபெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக