புதன், 31 அக்டோபர், 2012

லாகூர் ரவுண்டானாவுக்கு பகத் சிங் பெயர் வைப்பது நிறுத்தி வைப்பு


லாகூர் : பாகிஸ்தானின், லாகூரில் உள்ள, ரவுண்டானாவுக்கு, சுதந்திர போராட்ட வீரர், பகத் சிங் பெயர் வைப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு, பாகிஸ்தானில், வழக்கத்தில் இருந்த, இந்து பெயர்கள், மாற்றம் செய்யப்பட்டு விட்டன. இதற்கிடையே, லாகூரில், ஷத்மான் சவுக்கில் உள்ள ரவுண்டானாவுக்கு பகத் சிங் பெயர் சூட்டப்படுவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். பாகிஸ்தானை சேர்ந்த, சுதந்திர போராட்ட வீரர் சவுத்ரி ரெஹ்மான் அலி பெயரை சூட்ட வேண்டும், என, சிலர் கோரியிருந்தனர். இந்திய சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங், பிரிட்டிஷ் போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றதற்காக, லாகூர் சிறையில், அடைக்கப்பட்டிருந்தார். 1931ம் ஆண்டு, மார்ச் மாதம், இவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போரிட்டு, உயிர் நீத்த பகத் சிங் பெயரை சூட்ட வேண்டும், என, லாகூர் நகர நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. பகத் சிங் பெயரை சூட்டுவதற்கு, எதிர்ப்பு தெரிவித்த மனுக்கள், நிராகரிக்கப்பட்டன. ஆனால், மும்பை தாக்குதலில் சம்பந்தப்பட்ட, பயங்கரவாத அமைப்பான "ஜமாத்-உத் தாவா' உள்ளிட்டவை, பகத் சிங் பெயர் வைப்பதற்கு, தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தன. "சீக்கியரின் பெயரை, சூட்டினால், கடுமையான பின்விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்' என, மிரட்டல் வந்ததால், பகத் சிங் பெயர் எழுதப்பட்ட பலகைகளை வைப்பதை, நகராட்சி ஊழியர்கள் நிறுத்தி வைத்திருந்தனர். இதற்கிடையே, பகத் சிங் பெயர் சூட்டுவதற்கான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டதாக, நகர நிர்வாகம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக