சனி, 6 அக்டோபர், 2012

ட்ரோன் தாக்குதல் – அமெரிக்காவை கண்டித்து அமைதி பேரணியை தொடங்கினார் இம்ரான்கான்!


இஸ்லாமாபாத்: ‘தங்கள் கட்சிக்கு ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்க ட்ரோன் விமானங்கள் மீது தாக்குகுதல் நடத்தப்படும்’ என்று தெஹ்ரிக்-இ-இன்சாத் கட்சியின் தலைவர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஆளில்லா உளவு விமானங்கள் குண்டு வீச்சு நடத்துவதை எதிர்த்து வரிசிஸ்தான் நோக்கி அமைதி பேரணியை, இம்ரான்கான் தொடங்கினார். அவருடன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வாகனங்களில் பேரணியாக சென்றனர். பாகிஸ்தானில் வடக்கு வரிசிஸ்தான் பகுதியில் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி ஆளில்லா உளவு விமானங்கள் மூலம் அப்பாவி மக்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது அமெரிக்கா. இதில் ஏராளமான அப்பாவி பொது மக்கள் பலியாகி வருகின்றனர். அமெரிக்காவின் இந்த குண்டு வீச்சுக்கு தெஹ்ரிக்-இ-இன்சாத் கட்சியின் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவருமான இம்ரான்கான் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த குண்டு வீச்சை நிறுத்த தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அமைதி பேரணி நடத்தப்படும் என அவர் அறிவித்தார். பேரணி சென்றால் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடக்கலாம் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்தது. இந்த மிரட்டல்களை மீறி இம்ரான்கான் நேற்று தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து அமைதி பேரணியை தொடங்கினார். அவருடன் இந்த பேரணியில் முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அணிவகுத்து சென்றனர். இந்த பேரணி வடக்கு வசீரிஸ்தானில் உள்ள கோத்கை கிராமத்தை இன்று சென்றடையும்.
இதுகுறித்து இம்ரான்கான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்; “தலிபான்களால் எங்களுக்கு எந்த மிரட்டலும் இல்லை. பாகிஸ்தான் அரசாங்கம் தான் இந்த பேரணியை நிறுத்த முயற்சி செய்கிறது. யாருக்கும் எதிராக இந்த பேரணியை நடத்தவில்லை. பழங்குடியினர் பகுதியில் அமைதி நிலவ வேண்டும். அதற்கு அரசாங்கம் தனது கொள்கையில் மாற்றம் செய்ய வேண்டும். அமெரிக்கா நடத்தும் உளவு விமானம் குண்டு வீச்சை கண்டிக்கிறார்கள். ஆனால் தங்களுக்கு ஆதாயம் இருப்பதால் ரகசியமாக அதற்கு துணை போகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக