சனி, 6 அக்டோபர், 2012

5 வருடங்கள் கழித்து “லஷ்கர் தீவிரவாதிகள்” நிரபராதிகள் என்று விடுதலை!

புதுடெல்லி : 1857ம் ஆண்டு ஆங்கிலேயருக்கெதிராக நடந்த சிப்பாய்க் கலகத்தின் 150வது வருட நினைவு நாளின் பொழுது தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டினார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட 3 முஸ்லிம்களை ஐந்து வருடங்கள் கழித்து அமர்வு நீதிமன்றம் நிரபராதிகள் என்று அறிவித்து விடுதலை செய்துள்ளது. 2007 ஏப்ரல் 27ம் தேதி லஷ்கரே தய்யிபா தீவிரவாதிகள் என்று குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ஜம்மு கஷ்மீரைச் சார்ந்த ஷஃப்காத் இக்பால் மிர், ஷாபிர் அஹ்மத், பாகிஸ்தானைச் சார்ந்த முஹம்மத் ஹசன் ஆகியோரை அமர்வு நீதிமன்றம் குற்றமற்றவர்கள் என்று கூறி விடுதலை செய்தள்ளது. ஆனால் முஹம்மத் ஹசன் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தார் என்று அறிவித்த நீதிமன்றம், அதற்கான தண்டனை இந்த வாரத்திற்குள் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளது. டெல்லி ஹாத் பகுதியில் குண்டு வைப்பதற்கான வெடிபொருட்களை இவர்கள் கொண்டு செல்லும்பொழுது பிடித்ததாக டெல்லி போலீசார் கூறியிருந்தனர். ஆனால் இந்தக் குற்றச்சாட்டையும், இந்த மூன்று பேரும் லஷ்கரே தய்யிபாவைச் சார்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டையும் போலீசாரால் நிரூபிக்க முடியவில்லை. அது மட்டுமல்ல. கஷ்மீரைச் சார்ந்தவர்களான ஷஃப்காத் இக்பால் மிர், ஷாபிர் அஹ்மத் ஆகியோரை பாகிஸ்தானைச் சார்ந்த முஹம்மத் ஹசனிடம் லஷ்கர் தலைவர் அபூபக்கர் என்பவர் அனுப்பி வைத்தார் என்று போலீஸ் கூறியிருந்தது. ஆனால் இந்த அபூபக்கர் என்று ஒரு ஆளே இருக்கிறாரா என்பது சந்தேகத்திற்கிடமாகிவிட்டது. ஏனெனில் அரசுத் தரப்பு வழக்கறிஞரால் அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கொடுக்க முடியவில்லை. இவ்வாறு நீதிமன்றம் கூறி அந்த 3 அப்பாவிகளையும் விடுவித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக