ஞாயிறு, 14 அக்டோபர், 2012

மலாலாவுக்கு சிகிச்சையளிக்க ஐக்கிய அரபு எமிரேட் தயார்


இஸ்லாமாபாத்:தலிபான்களின், துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த, பாகிஸ்தானிய மாணவிக்கு, வெளிநாட்டில் சிகிச்சையளிக்கும் பொருட்டு, "ஏர் ஆம்புலன்ஸ்' உதவி அளிக்க, ஐக்கிய அரபு எமிரேட் முன்வந்துள்ளது. பாகிஸ்தானின், பழங்குடிகள் அதிகம் வசிக்கும், ஸ்வாட் மாவட்டத்தின், மிங்கோரா நகரைச் சேர்ந்தவர் மலாலா யூசுப்சாய், 14. அமைதி குறித்து, பல்வேறு பேச்சுப் போட்டிகளிலும், தன்னார்வ நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றவர் மலாலா.பள்ளி மாணவியான மலாலா, கடந்த வாரம், பேருந்தில் வீட்டுக்குச் செல்ல காத்திருந்தார். அப்போது, அங்கு வந்த தலிபான் பயங்கரவாதிகள், மலாலாவை இரண்டு முறை சுட்டனர். இதில், தலை மற்றும் கழுத்தில் குண்டுகள் பாய்ந்தன. பலத்த காயமடைந்த மலாலா, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், அறுவை சிகிச்சை மூலம், இரண்டு குண்டுகள் அகற்றப்பட்டன. இருப்பினும் மலாலாவின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது..
அமைதிக்காக, இளம் வயதிலேயே சேவையாற்றும் மலாலாவின் பெயர், சர்வதேச சிறுவர் அமைதி விருதுக்கு, பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதற்கு, தலிபான்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். "பெண்கள் படிக்கக் கூடாது. அதிலும் மலாலா, பொது இடங்களில், பகிரங்கமாக எங்களை எதிர்த்து பேசி வந்ததால், அவரை சுட்டோம்' என, தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.தலிபான்களின் இந்தச் செயலை, சர்வதேச தலைவர்கள் கண்டித்துள்ளனர். மலாலாவுக்கு, வெளிநாட்டில் சிகிச்சையளிக்க நேர்ந்தால், அதற்காக ஏர் ஆம்புலன்ஸ் உதவி அளிக்கத் தயாராக இருப்பதாக, ஐக்கிய அரபு எமிரேட்டின், பாகிஸ்தானிய தூதர் ஜமீல் அகமது கான் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், "துபாய் மற்றும் அபுதாபியில் உள்ள மூன்று மருத்துவமனைகள், மலாலாவுக்கு சிகிச்சையளிக்கத் தயாராக உள்ளன' என்றார்.மலாலா மீது தாக்குதல் நடத்தியதாக, ஸ்வாட் பகுதி, தலிபான் தளபதி, மவுலானா பசலுல்லாவின் மூன்று சகோதரர்களை, போலீசார் கைது செய்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக