வியாழன், 18 அக்டோபர், 2012

கூடங்குளம் பிரச்சினை அயல்நாட்டு சதியா ?


கூடங்குளம் ஓர் பார்வை : திருநெல்வேலியில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது கூடங்குளம். இங்கு தான் 1000 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் துவங்க உள்ளன. இதில் யுரனியம் நிரப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் இந்த கலவரம். இந்த இரண்டு அணு உலைகளுக்கான செலவு மட்டும் சுமார் 13 ஆயிரம் கோடிகளை தாண்டி விடுகிறது. இது ரஷ்யத் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் அமைக்கப் பட்டு வருகிறது. ஒருவேளை அமெரிக்க்காவின் ஆதரவில் அமைக்கப் பட்டால் இந்த களேபரம் வராதோ என்று நினைக்குமளவுக்கு மத ரீதியிலான போராட்டமாகவே இது பார்க்கப் படுகிறது. கம்யுனிச ரஸ்யாவால் இந்த அணு உலை அமைக்கப் படுவதால் தான் இந்த போராட்டம் என்று பலர் கூறுவதும் கேட்கத்தான் செய்கிறது.
மேலும் ஒரு அணுமின் நிலையத்தை சில மாதங்களில் கட்டி முடித்து உற்பத்தியை துவங்கி விட முடியாது. இந்த அணு உலை அமைப்பதற்கான ஒப்பந்தம் 23 ஆண்டுகளுக்கு முன்பே 1988 ல் ராஜீவ் காந்தி - கோர்பசேவ் இடையே போடப் பட்டது. ஆனால் இதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே அடிப்படை ஆயத்த வேலைகள் துவக்கப் பட்டன. இந்த திட்டத்திற்கு தேவையான நிலத்தை அந்தப் பகுதி மக்களின் ஆதரவோடுதான் விலைக்கு வாங்கப் பட்டது என்று அரசு அதிகாரிகள் குறிப்பிடுகிறார்கள். மக்கள் ஆதரவு இல்லாமல் இடத்தை வாங்கவும் முடியாது என்பது நிதர்சனம். கடந்த 20 ஆண்டுகளாக கட்டுமானப் பணிகள் நடந்து இப்போது மின் உற்பத்திக்கு தயாராக உள்ளது. துவக்கத்தில் எதிர்ப்பு காட்டி இதை நிறுத்தி இருக்கலாம். ஆனால் இத்தனை கோடி செலவான பிறகு இப்போது நிறுத்த முயற்சிப்பது எந்த வகையில் நியாயம் என்பது தான் சிந்தனையாளர்களின் கருத்து. உலகில் உருவான எந்த ஒரு கண்டுபிடிப்பிற்கு பின்னும் ஆபத்துகள் இல்லாமல் இல்லை. விமானத்தில் சென்றால் விபத்து ஏற்படும் என்பதற்காக விமானத்தையே தடை செய்ய முடியாது. எத்தனையோ லட்சம் பேர்களின் தியாகத்தில் தான் இன்றைய நவீன யுக கண்டுபிப்புகள் எல்லாம் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. நாளைக்கு வரும் விசயத்திற்காக இன்றைக்கு தடுப்பு நடவடிக்கை தான் மேற்கொள்ள முடியும். பாதுகாப்பில் குறை பாடுள்ளதோ என்று தான் ஆராய வேண்டுமேயொழிய கொசுத் தொல்லைகாக வீட்டை கொளுத்த முடியாது. அணு உலைகளை விட ஆபத்தான நுன்னுயிர் தொழிற்சாலைகளையே நாம் கண்டு கொள்வதில்லை. இதை விட முக்கியமான விஷயம் இந்த அணு மின் நிலையத்திகுள்ளே நூற்றுக்கணக்கான விஞ்ஜானிகள் வேலை பார்கிறார்கள். அணு உலை வெடித்தால் முதலில் மரணமடைபவர்கள் அவர்கள் தான். அவர்களே அணு உலைனால் ஆபத்து இல்லை என்கிறார்கள். அணு உலைகளின் அபாயத்தை பற்றி அதிகம் தெரிந்தவர்கள் அவர்கள்தான். அப்படி என்றால் ஒன்றுமறியாத மக்களை வைத்து சிலர் விளையாடுவது போல்தான் தோன்றுகிறது. இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூட அணு உலை ஆபத்து இல்லை என்று தான் கூறுகிறார் . இதை உணர்ச்சி பூர்வமாக ஆக்காமல் அறிவுப் பூர்வமாக சிந்திக்க வேண்டும். அணு மின் நிலையம் அமைக்க கூடங்குளத்தை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் ?
1 . அணுமின் நிலையம் அமைந்துள்ள கூடங்குளம் பகுதி பூகம்ப அபாயம் மிகக் குறைவான பகுதி. 2 . பூமிக்கு அடியில் கடினமான பாறைகள் இருப்பதால் அணு உலைகளின் கான்கிரீட் அடித்தளத்திற்கு சிறந்தது. 3 . மிகப் பெரிய நில அதிர்வு வந்தாலும் உள்கட்டமைப்பு பாதிக்காத வகையில் முழுமையாக இயங்கலாம். 4 . இங்குள்ள கட்டிடங்களின் தரை உயரம் கடல் மட்டத்திலிருந்து 7 .5 மீட்டர் உயரத்தில் உள்ளது. 5. ஒருவேளை நில அதிர்வு ஏற்பட்டால் சுனாமி யால் பாதிப்பு ஏற்படாத வகையில் கடல் நீர்மட்டத்தை கணக்கிட்டு தான் அணு உலை அமைக்கப் பட்டுள்ளது. 6 . தேவைக்கு ஏற்ற நீர் கடலில் உள்ளது. 7 . அணு உலையில் இருந்து 1 .2 மைல் தூரத்திற்கு 18 மைல் சுற்றளவில் நெருக்கமான அதிக மக்கள் தொகை கொண்ட ஊர் கிடையாது. 8. இது விவசாயத்திற்கு பயன்படாத வறண்ட பூமி. 9 . ரயில், கப்பல், சாலை என்று போக்குவரத்து வசதி சிரமம் இல்லை. 10 . விமான விபத்து, ரசாயன விபத்து, ராணுவ ஆபத்து எதுவும் இல்லை. மேற்குறிப்பிட்ட இத்தனை அம்சங்களை அடிப்படையாக கொண்டு ஆய்வு செய்துதான் கூடங்குளத்தை தேர்ந்தெடுத்துள்ளார்கள். சும்மா எல்லா பகுதிகளையும் அணு உலை அமைக்க உபயோகப் படுத்த முடியாது. இந்தியாவில் மட்டுமா ? அணு உலைகள் உலகம் முழுவதும் 31 நாடுகளில் 44o இடங்களில் அமைக்கப் பட்டுள்ளது. உலகின் கலாசார சிகரம் எனப்படும் அமெரிக்காவில் (அமெரிக்கர்கள் தங்கள் உயிருக்கு பயப்படுபவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அடுத்தவர் உயிரைப் பற்றி கவலை படமாட்டார்கள் அங்கு ) மட்டுமே 104 அணு உலைகள் உள்ளன. பிரான்ஸ் நாட்டில் 59 ம், பூகம்பத்தால் பதிக்கப் படுகிற ஜப்பானில் 55 அணுமின் நிலையங்கள் உள்ளன. ஏன் இந்தியாவில் தமிழ் நாட்டில் உள்ள கல்பாக்கம் உட்பட 17 அணுமின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்தியாவில் அணுமின் நிலையங்களை இயக்க திறமையுள்ள , துணிச்சல் உள்ள ஏராளமான் நிபுணர்கள் உள்ளனர் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். அணு உலைவெடித்து சிதறினால் , கதிரியக்கம் வெளியானால் ஆபத்து என்பது மறுக்க முடியாத உண்மைதான் . அதற்காக எல்லா அணு உலைகளும் கண்டிப்பாக வெடித்தே தீரும் என்று அச்சப் பட வேண்டிய அவசியம் இல்லை.
கூடங்குளம் பிரச்சினை அயல்நாட்டு சதியா ? கூடங்குளம் போராட்டங்களை நாம் அயல் நாட்டு சதி என்று சொல்வதற்கு பல நியாயமான காரணங்கள் உள்ளன. ஏனென்றால் தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதிகளில் செயல்படுகின்ற பல கிறிஸ்தவ அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து சமூக சேவைக்காக என்று சொல்லி அதிகமான அளவில் நிதி பெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக அமெரிக்கா , பிரான்ஸ் , ஜெர்மனி போன்ற நாடுகளில் இருந்து கணிசமாக பணத்தை பெற்று உள்ளன. உதாரணமாக, தூத்துக்குடி டயசிஸ் அசோசிசன் (TDA) என்ற அமைப்பு 2010 -2011 ம் ஆண்டில் பிரான்சில் இருந்து ஒரு கோடியே 43 லட்சம் 23 ஆயிரம் 406 ரூபாய், ஜெர்மனியில் இருந்து 84 ,13 ,619 ரூபாய், இத்தாலியில் இருந்து 61 ,55 ,843 ரூபாய், நெதர்லாந்தில் 45 ,54 ,572 ரூபாய் ஆக மொத்தம் ஏறக்குறைய 4 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை ஒரு ஆண்டில் பெற்றுள்ளது. இது போல் பல அமைப்புகள் பெற்றுள்ளன . இவை அனைத்து பணமும் மத விவகாரங்கள், மக்கள் சேவைக்கு மட்டும்தான் பயன் படுத்தப் படுகிறதா ? இல்லை கூடங்குளத்திற்கும் பயன் படுத்தப் படுகிறதா ? என்ற சந்தேகம் பெரும்பாலோருக்கு எழத்தான் செய்கிறது. இந்த சந்தேகம் பிரதமருக்கும் எழுந்ததால் தான் கடந்த வருடம் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பெட்டியில் இந்த கருத்தை தெரிவித்தார். மேற்குறிப்பிட்ட தகவல் அனைத்தும் இந்த வருடம் ஜனவரி மாதம் இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்கள். பல பத்திரிகைகளிலும் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க , பிரான்ஸ் ,ஜெர்மனிக்கு இந்தியாவில் உருவாகும் அணுஉலை திட்டத்தை எதிப்பதற்கான காரணம் என்ன ? ஏன் தேவை இல்லாமல் எதிர்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா ? அதற்கு காரணம் உண்டு. அமெரிக்க, ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் அணு உலைகளையும் , அதன் தொழில் நுட்பத்தையும் இந்தியாவிடம் விற்க முயற்சி செய்து முடியாமல் போய் விட்டது. ஏனென்றால் இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு அவை ஒத்துவரவில்லை. உதாரணமாக ஏ,பி, 1000 (A.P.1000) அணு உலையை தயாரிக்கும் வெஸ்டிங் ஹாவுஸ் - டோசிபா என்கிற அமெரிக்க நிறுவனம் இந்திய சட்டங்களில் இருந்து தங்களுக்கு விதிவிலக்கு அளிக்கும்படி கேட்டன இந்தியா அதற்க்கு மறுத்து விட்டது. இது போல் தான் மற்ற நாடுகளும். தங்கள் அணு உலைகளின் விற்பனை வாய்ப்பு பறிபோய் விட்டதே என்ற காழ்புணர்ச்சியில் இந்த நாடுகளின் நிறுவனங்கள் சதி வேலைகளில் ஈடு பட்டிருக்கவும் வாய்ப்பு உண்டு. மேலும் தமிழ் நாட்டில் உள்ள தொண்டு நிறுவனங்களுக்கு ( பெரும்பாலானவை கிறிஸ்தவ அமைப்புகள் ) 2009 - 2010 ம் ஆண்டுகளில் மட்டும் வெளிநாடுகளில் இருந்து வந்த நிதி தொகை 1663 .31 கோடி ரூபாய்கள் என்பது நம்மை எல்லாம் மலைக்க வைக்கிறது. இதில் கூடங்குளம் போராட்டகுழு ஒருங்கிணைப்பாளர் உதய குமாருக்கும் சாக்செர் (SOCCER) South Asian community center for Education and Research என்ற பெயரில் தன்னார்வ அமைப்பு உள்ளது என்பதை நாம் கவனிக்க வேண்டும். பல நிறுவனங்களை சி.பி.ஐ. விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒட்டு மொத்தமாக கண்ணைமூடி கொண்டு நாம் குற்றம் சுமத்தவில்லை . சந்தர்ப்ப சூழ்நிலைகள் கூடங்குளம் போராட்டத்திற்கு அயல் நாட்டு சதிதான் காரணமாக இருக்கும் என்று நம்பத்தான் வைக்கிறது. பொதுவாகவே ஊடகங்கள் பொறுப்புணர்வில்லாமல் நடப்பது தான் இந்த மாதியான அறிவியல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உணர்ச்சிபூர்வமாக மாறுவதற்கு காரணம். பிரச்சினையை ஊதி பெரிதாக்காமல் இருப்பது பத்திரிகைகளின் கடமை. கேட்டதை விசாரிக்காமல் இணையதளம் மூலமாக பரப்பாமல் இருப்பது பொது மக்களின் கடமை. மக்களின் அச்ச உணர்வை நீக்கி ஆபத்து இல்லை என்று புரிய வைப்பது நல்ல அரசின் கடமை. அவரவர் கடமையை சரி வர செய்தாலே பிரச்சினை தீர்ந்து விடும் . மக்களின் வாழ்விலும் வீடுகளிலும் ( மின்சார பிரச்சினை தீர்ந்து ) ஒளி பிறக்கும். ஆக்கம் : அபுல் ஹசன் - தக்கலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக