சனி, 27 அக்டோபர், 2012

சிரியாவில் சண்டை நிறுத்தம் அமல்


டமாஸ்கஸ்: பக்ரீதையொட்டி, சிரியாவில் நான்கு நாட்களுக்கு, சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவில், அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவி விலகக் கோரி, கிளர்ச்சியாளர்கள், கடந்த, 18 மாதங்களாக போராடி வருகின்றனர். ஆசாத் பதவி விலக மறுப்பதால், கிளர்ச்சியாளர்களுக்கு, அமெரிக்கா, ஆயுதங்களை வழங்கி வருகிறது. இதனால், சிரியாவில், கடும் சண்டை நடக்கிறது. இரு தரப்பிலும் சமரசம் ஏற்படுத்துவதற்காக, அரபு நாடுகள் மற்றும், ஐ.நா.,வின் சார்பில், லக்தர் பிராமி நியமிக்கப்பட்டுள்ளார். பக்ரீதையொட்டி சண்டையை நிறுத்தும்படி, லக்தர் பிராமி கேட்டு கொண்டதன் பேரில், சிரிய அதிபர் பஷர் அல் ஆசாத், சண்டையை நிறுத்த ஒப்புக் கொண்டுள்ளார்.
"டிவி'யில் இது குறித்து, அதிபர் ஆசாத் கூறியதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளாக, என்ன நடக்கிறது என்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லை. அழிவு மற்றும் மரணம் தான் நடந்து கொண்டிருக்கிறது. இந்த சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும். எல்லாரும் கடவுள் பக்கம் வர வேண்டும். பிரிவினை வாதிகளை முறியடிக்க வேண்டும். புதிய மத்திய கிழக்கை நாம் உருவாக்குவோம். சிரியாவின் எதிரிகள் இதை உருவாக்க நிர்பந்திப்பதை ஏற்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார். பக்ரீதையொட்டி, சிரியாவில் நான்கு நாள் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த விடுமுறையை மக்கள் கொண்டாடுவதற்கு வசதியாக, சண்டை நிறுத்தத்தை அமல்படுத்துவதாக அரசு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக